இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய சட்டம்..!
இலங்கையில் தற்போதுள்ள சிக்கலான சட்டங்களுக்குப் பதிலாக இந்த வருட இறுதிக்குள் முதலீடுகள் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதன்படி, அடுத்த வருடம் முதல் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள சிக்கலான நிலைமைகள் நீக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதலீட்டாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்காக உலக வர்த்தக மையத்தில் முதலீட்டாளர் வசதி மையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், அது அனைத்து அரச நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
முதலீட்டாளர்கள் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கும், அது தொடர்பான நிறுவனங்களின் தலைவர்களை சந்திப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்கள் தமது பிரச்சினைகளை விரைவாக தீர்த்துக்கொள்ள இந்த நிலையம் வாய்ப்பளிக்கும் எனவும் திலும் அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய சட்டம் நடைமுறைபடுத்தப்படும் வரை தற்காலிக வேலைத்திட்டமாகவே இது நடைமுறைபடுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.