News

சிங்களக் குடியேற்றங்களை வவுனியாவுடன் இணைக்கும் செயற்பாடு தீவிரம்!

வவுனியா வடக்கின் எல்லையில் குடியேற்றப்பட்ட சிங்கள கிராமங்கள் சிலவற்றை வவுனியா மாவட்டத்தின் நிர்வாகத்திற்குள் எடுப்பதற்கான அவதானம் ஒன்றை செலுத்துமாறு தேசிய எல்லை நிர்ணய குழுவினால் வவுனியா மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டு முன்மொழியப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

அந்தவகையில், வவுனியா வடக்கின் எல்லை பகுதிகளில் பெரும் காடுகள் அழிக்கப்பட்டு அரசின் ஆதரவுடன் பெரும்பான்மையின மக்களின் குடியேற்றங்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் மேற்கொள்ளப்பட்டது.

அவற்றில் சில கிராமங்களின் நிர்வாக செயற்பாடுகளை வவுனியா மாவட்டத்துடன் இணைத்து முன்னெடுப்பதற்கான அவதானம் ஒன்றை செலுத்துமாறு எல்லை நிர்ணய ஆணைக்குழுவால் வவுனியா மாவட்ட நிர்வாகத்திற்கு முன்மொழிவு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்தவகையில், போகஸ்வெவ-1, போகஸ்வெவ-2, வெகரதென்ன, கம்பிலிவெவ, நாமல்கம, நந்திமித்திரகம, சலினிகம, ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாங்கள் அனுராதபுர மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் இருப்பதால் அரச நிர்வாக செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதுடன் பல்வேறு அசௌகரியங்களையும் சந்தித்து வருகின்றோம்.

ஆகவே எம்மை வவுனியா மாவட்ட நிர்வாகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்குமாறு எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கும், அதிபர் செயலகத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்தே குறித்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்துமாறு தேசிய எல்லை நிர்ணய குழுவால் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து வவுனியா மாவட்ட நிர்வாகம் அதனை வவுனியா மாவட்டத்திற்குள் உள்ளீர்ப்பதற்கான சாதகமான தீர்மானம் ஒன்றை எடுப்பதாக தீர்மானித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் அரச நிர்வாகங்களால் பெரும்காடுகளை அழித்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பெரும்பான்மையின குடியேற்றங்களால் பல சிங்கள கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை உட்பட பல இடங்களில் இருந்தும் அங்கு மக்கள் குடியமர்த்தப்பட்டனர். அந்த கிராமங்கள் உரிய கட்டமைப்புகளை கொண்டிராதமையால் தற்போது அவற்றில் நிர்வாக சிக்கல்கள் இருப்பதை காரணம்காட்டி அவற்றை வவுனியாவுடன் இணைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் குறித்த கிராமங்களுக்கு சென்ற வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அந்த மக்கள் பெரும் துன்பப்படுவதாகவும் அவர்களது பிரச்சினை சாதகமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தொடர்ச்சியாக முயற்சிகளை எடுத்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button