News

விவசாய துறையில் புதிய திட்டம் – அமைச்சர் வெளியிட்ட தகவல்

அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய விவசாய துறையில் தொழிநுட்பத்தை இணைத்து ஏற்றுமதி விவசாய பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்திரமான நாட்டிற்கு அனைவரும் ஒரே வழிக்கு என்ற தொனிப்பொருளில் அதிபர் ஊடக மையத்தில் நேற்று(21) செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதிபர் நாட்டை பொறுப்பேற்ற போது, உர வரிசை, எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசை போன்ற வரிசைகள் மாத்திரமே காணப்பட்டன என்றும் அவர் விவசாய அமைச்சராகப் பதவியேற்ற போதும் பெரும் சவால் நிறைந்திருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்நாட்டு விவசாயிகளுக்கு உரம் பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“அச்சவாலை ஏற்றுக்கொண்டு முதற்கடமையாக விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக்கொடுத்தேன்.

அதிபரின் அறிவுரைக்கமைய விவசாயிகளுக்கான அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதனால் தற்போது, பெரும்போக விளைச்சல் போதியளவு கிடைத்துள்ளது. சிறுபோகத்திற்கு அவசியமான உரமும் தற்போது மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அதிபர் நாட்டை பொறுப்பேற்றுக்கொண்ட போது,விவசாயிகள் விவசாய நிலத்தை விடுத்து ஆர்ப்பாட்ட பூமியில் களமிறங்கி இருந்தனர். தற்போது விவசாயிகள் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

சில அரசியல் தலைவர்களே விவசாயிகளை ஆர்பாட்ட களத்திற்கு இழுத்தார்கள் என்பது இரகசியமல்ல.

விவசாயிகளை விவசாய செயல்பாடுகளில் இருந்து விடுபடச் செய்து மக்களையும் பசியில் வாழ செய்யும் அரசியல் சூழ்ச்சியையும் சிலர் முன்னெடுத்தனர். அந்த சவால்களுக்கு அதிபர் தலைமையிலான இந்த ஆட்சி திறம்பட முகம் கொடுத்தது.

அதிபரின் விவசாய நவீன மயப்படுத்த வேலைத்திட்டத்தின் கீழ் ஹெக்டெயர் ஒன்றில் பெற்றுக்கொள்ள கூடிய அறுவடையின் தொகையை அதிகரிக்க முடிந்துள்ளது.

சில விவசாயிகள் குறிப்பிட்ட பருவ காலங்களில் 11,000 கிலோவை அறுவடை செய்துள்ளனர்.

மரக்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியிலும் புதிய தொழில்நுட்பத்தை உள்ளீடு செய்வதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை முன்னெடுத்து வருகிறது.இதன் கீழ் இலங்கை மக்களின் உணவுத்தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.

அதன் பின்னர் வெளிநாட்டு வருமானத்தை ஈட்டக்கூடிய வலுவானதிட்டமிடல் ஒன்றை தயாரிக்க இருக்கின்றோம். வெளிநாட்டு வருமானத்தை ஈட்டக்கூடிய விவசாய அமைச்சு ஒன்றை உருவாக்குவது எமது நோக்கம்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button