சுகாதார அமைச்சு அதிகாரிகளின் கவனயீனம் : சுங்கத்தில் தேங்கியுள்ள தடுப்பூசிகள்
சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சரியான நேரத்தில் அனுமதி பெறத் தவறியதை அடுத்து, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு நன்கொடையாக அனுப்பப்பட்ட மெனிங்கோகோகல் தடுப்பூசி தொகுதி இன்னும் சுங்கத்தில் தேங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஹஜ்ஜுக்குப் புறப்படும் நூற்றுக்கணக்கான இலங்கை இஸ்லாமியர்களுக்கு கட்டாய மெனிங்கோகோகல் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
மூளைக்காய்ச்சல் இலங்கையில் அரிதானது என்ற போதிலும் மக்காவில் ஹஜ் செய்யும் யாத்ரீகர்களுக்கு மெனிங்கோகோகல் தடுப்பூசி என்பது சவுதி அதிகாரிகளால் விதிக்கப்பட்ட கட்டாயத் தேவையாகும்.
இந்தநிலையில், இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திலோ அல்லது பதிவு செய்யப்பட்ட மருந்து நிறுவனங்களிலோ இந்த தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்று கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து சுகாதார அமைச்சு 1,000 மெனிங்கோகோகல் குப்பிகளை கோரியதாகவும் எனினும் 200 குப்பிகளுக்கு அனுமதி கிடைத்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
எனினும், இந்த வரையறுக்கப்பட்ட அளவு கூட கொழும்பு துறைமுகத்தில் இருந்து சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவினால் எடுத்துச் செல்லப்படவில்லை என்று கொழும்பின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.