News

கவர்ச்சிகரமான சுற்றுலா தலமாக மாறும் சிறிலங்கா…!

சிறிலங்காவை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலமாக மாற்ற ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இந்திய சுற்றுலா சம்மேளன நிகழ்வில் உரையாற்றும்போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“எல்லைகளுக்கு அப்பால் பிம்ஸ்டெக் வலயத்தை அபிவிருத்தியடைந்த சுற்றுலாப் பிரதேசமாக மேம்படுத்த, அனைத்து பிம்ஸ்டெக் நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அதிபர் இங்கு வலியுறுத்தினார்.

புதிய திட்டங்களின் ஊடாக சிறிலங்காவை மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலமாக மாற்றுவேன் என நான் உறுதியளிக்கிறேன். அதற்காக எமது சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்.

சிறிலங்காவிற்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்தையும், கதிர்காமக் கந்தன் சந்நிதியை தரிசிக்க தவறாமல் செல்ல வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆலயம் 2000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது. வலயத்தில் மிகப் பழைமையான ஆலயமொன்றாகும். சில நாட்களுக்கு முன்னர் அங்கு சென்றிருந்தபோது பெருமளவிலான மக்கள் கூடியிருந்தனர். அத்துடன், யாழ்ப்பாணத்தில் நல்லூருக்கு சென்று வருடாந்த உற்சவத்தை கண்டுகளிக்கலாம்.

சிறிலங்கா வங்குரோத்து நிலையில் இருந்து மீட்கும் வகையில் கடனை மறுசீரமைக்க வேண்டும். சுற்றுலாத்துறை என்பது கடன் அல்லாத நிதியை திரட்டுவதற்கான ஒரு வழியாகும். எனவே அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

தற்போது சிறிலங்காவிற்கு வருடாந்தம் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதனை 5 மில்லியனாக உயர்த்துவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.

ஒரு சுற்றுலா பயணி ஒரு இரவுக்கு குறைந்தபட்சம் 1000 டொலர்களை செலவழிக்கும் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

தெற்காசிய நாடுகளில் மிகச்சிறிய மாலைதீவிலிருந்து சுற்றுலா பற்றி நாம் கற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் பல உள்ளன.

நுவரெலியாவை கொல்ப் விளையாட்டின் மையமாக மாற்றுவதற்கு மேலும் 7 கொல்ப் மைதானங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். பெரிய சுற்றுலா விடுதிகளை உருவாக்க வேண்டும்.“ என்றவாறு தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button