News

ஒரே நேரத்தில் வழங்கப்படும் அஸ்வெசும இரு மாதங்களுக்கான பணம்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட பெயர் பட்டியலில் மாற்றம் ஏற்படும் போது புதிதாக உள்வாங்கப்படுவோருக்கான ஜூலை, ஆகஸ்ட் மாத தவணை கொடுப்பனவுகள் ஒரே நேரத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், அரச நலன்புரித் திட்ட கொள்கைக்கு அமைய கிடைக்கப் பெற்ற 33 இலட்ச விண்ணப்பதாரிகளில் 70 சதவீத சமுர்த்தி பயனாளர் குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் ஊடாக 22 இலட்சம் குடும்பங்களுக்கு குறுகிய மற்றும் நீண்டகால திட்டத்துக்கு அமைய நிவரணத் தொகை வழங்கப்படவுள்ளது. இந்த தொகை 16.8 இலட்சம் சமுர்த்தி பயனாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

அத்துடன் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

சமுர்த்தி பயனாளர் குடும்பங்களில் 1,280,747 பேர் காப்புறுதிப் பலன்களுக்காக விண்ணப்பித்துள்ளதுடன் அவர்களில் 70 சதவீதமான 887,653 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளனர். அதன்படி அஸ்வெசும திட்டத்தில் 11 இலட்சம் குடும்பங்கள் நிவாரணம் பெற தகுதி பெற்றுள்ளார்கள்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் தகுதி இருந்தும் எவரேனும் புறக்கணிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு நிச்சயம் நியாயம் வழங்கப்படும். இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 990,000 மேன்முறையீடுகளும், 70,000 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளவர்களுக்கான நலன்புரி கொடுப்பனவு இம்மாதத்தின் இறுதி பகுதியில் இருந்து வழங்கப்படும். மேன்முறையீடுகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக முழுமையாக பரிசீலனை செய்யப்படுகிறது.

பரிசீலனைகளை தொடர்ந்து பெயர் பட்டியலில் மாற்றம் ஏற்படும் போது புதிதாக உள்வாங்கப்படும் பயனாளர்களின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத தவணை கொடுப்பனவு ஒரே நேரத்தில் வழங்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நலத்திட்ட உதவி கொடுப்பனவுகள் பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் ஜனாதிபதி அலுவலகம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button