News

மோடி – ரணில் சந்திப்பு : எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபராகப் பதவியேற்ற பின்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சற்று முன்னர் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பாராட்டினார்.

இதேவேளை இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் கடினமான காலங்களில், இந்தியா வழங்கிய உறுதியான ஆதரவுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கம், இந்திய மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கையில் அனைவரும் பொருளாதார மறுமலர்ச்சி, நிலையான அபிவிருத்தி, நீதி ஆகியவற்றை அடைவதற்கான தனது அர்ப்பணிப்பை அதிபர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தினார். நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அதிபர் அழைப்பு விடுத்தார். இந்த முயற்சிகளுக்கு பிரதமர் மோடி தனது ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்தார்.

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர்.

இலங்கைக்கு வலுசக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது.

பொருளாதாரப் பங்காளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நவீன இணைப்பு முக்கியப் பங்காற்றுகிறது என்று தெரிவித்த அதிபர் , அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மற்றும் யாழ்ப்பாண விமானச் சேவைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல் என்று சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்குமிடையில் விமான சேவைகளையும், கப்பல் சேவைகளைகளையும் மேம்படுத்த உடன்பாடு காணப்படுவதாகவும், அது சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் அதிபர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகள் குறித்து சுட்டிக்காட்டிய அதிபர் , இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் எதிர்கால இந்திய-இலங்கை பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை பொருளாதார சீர்திருத்தங்களை சீராக நடைமுறைப்படுத்தி வருவதாகவும், இந்தியப் பிரதமருடனான தூதுக்குழு மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான சாதகமான பெறுபெறுகளை வெளிப்படுத்தி வருவதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மூலம் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வழிவகுத்துள்ளது எனக் குறிப்பிட்டார். Gallery Gallery Gallery Gallery

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button