ரஷ்ய- உக்ரைன் போரின் எதிரொலி; ஆசியாவில் ஏற்படவுள்ள தாக்கம்
ரஷ்யா – உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக ஆசியாவில் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் உக்ரைனிலிருந்து தானிய வகைகளை ஏற்றுமதி செய்வது குறித்த கருங்கடல் தானிய இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தைகளில் இருந்து ரஷ்யா விலகிக் கொண்டது.
இந்த நடவடிக்கையானது ஆசிய நாடுகளை பெரிதும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உக்ரைனின் ஏற்றுமதியில் ஏற்படும் வீழ்ச்சியானது வேறு நாடுகளில் இருந்து தானிய வகைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனின் கருங்கடல் தானிய இணக்கப்பாட்டு திட்டத்தின் கீழ் 46 வீதமான தானிய வகைகள் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்பதுடன் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 40 வீதமான தானியங்களும், 12 வீதமான தானிய வகைகள் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைனின் தானிய வகைகளை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக சீனா காணப்படுகின்றது.
நான்கில் ஒரு பகுதி அதாவது இருபத்தைந்து விதமான பொருட்களை சீனா இறக்குமதி செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவுப் பொருள் இறக்குமதி செய்வது தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையானது ஆசிய நாடுகளின் உணவு பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தானிய வகைகள் மற்றும் மரக்கறி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் விலை அதிகரிப்பு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் போர் காரணமாக இவ்வாறு உணவு பொருட்களுக்கு ஏற்படக்கூடிய தட்டுப்பாடு ஆசிய நாடுகளை அதிக அளவில் பாதிக்கும் என சர்வதேச ஊடகமொன்று அறிக்கையிட்டுள்ளது.