News

உணவுத் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய சிறிலங்கா அரசின் திட்டம்!

சிறிலங்காவில் எதிர்காலத்தில், உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமாயின், அதனை எதிர்கொள்ளும் வகையில், 11 ஆயிரம் தரிசு வயல் நிலங்களில் மீண்டும் பயிர்ச்செய்கை செய்ய சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே விவசாய இராஜாங்க அமைச்ச்ர் மொஹான் பீ. டி. சில்வா இதனைத் தெரிவித்தார்.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக குறித்த தரிசு வயல் நிலத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாகவும், இதற்காக 420 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்

”கடந்த காலங்களில் எமது நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு துறையாக விவசாயம் காணப்படுகின்றது. அதிபர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் படிப்படியாக இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது. அதற்கு நாம் அனைவரும் அதிபருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போது அரிசி ஏற்றுமதியை தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளன. எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள உலக உணவு நெருக்கடியை எதிர்கொள்ள அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். எனவே, ஒரு நாடு என்ற வகையில், இந்த நெருக்கடியை எதிர்கொள்ள நாமும் தயாராக வேண்டும்.

நாட்டின் விவசாயத் துறையை மேம்படுத்துவதை அரசாங்கத்தால் மாத்திரம் செய்ய முடியாது. அதற்கு அனைவரின் ஆதரவும் அவசியம்.

அதிபரின் பணிப்புரையின் பேரில் அண்மையில் பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஊடாக நெல் கொள்வனவு செய்யப்பட்டதுடன் அதன் மூலம் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.

நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக நெல் கொள்வனவை இடைநிறுத்தியிருந்த நெல் சந்தைப்படுத்தல் சபை, அதிபரின் பணிப்புரையின் பிரகாரம் மீண்டும் முறையான வழிமுறைகள் ஊடாக நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது, கொள்வனவு செய்யப்படும் நெல் கையிருப்பை களஞ்சியப்படுத்த நாடு பூராகவும் களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் எமது நாட்டில் அரிசி மேலதிக கையிருப்பு இருந்தது. நாட்டில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அந்நிலை வீழ்ச்சி அடைந்ததால் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் மீண்டும் பழைய நிலைக்கு மீளலாம்.

எமது நாட்டின் பயன்பாட்டுக்கு சுமார் 24 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி தேவைப்படுவதாகவும், அந்த வகையில் தற்போது முன்னெடுக்கப்படும் முறையான பொறிமுறைகளின் மூலம் எதிர்காலத்தில் எமது நாடு அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடையும் என்று எதிர்பார்க்கின்றோம்.

மேலும், சோளம், உழுந்து, பயறு உள்ளிட்ட மேலதிக பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க விவசாய அமைச்சரின் ஆலோசனையின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உழுந்து, பயறு ஆகியவற்றைப் பயிரிடும் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் எதிர்காலத்தில் உழுந்து பயறு ஆகிய பயிர்களில் பற்றாக்குறை ஏற்படாது.

நாட்டில் தற்போது இளைஞர்கள் படிப்படியாக விவசாயத்திலிருந்து விலகிவருகின்றனர், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவுத் திட்ட அறிக்கை உரையில் குறிப்பிட்டபடி, விவசாயத் துறைக்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயத் துறையில் இளைஞர் சமுதாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இளைஞர் தொழில்முனைவோர் விவசாய கிராமங்களை நிறுவும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதற்காக பயன்படுத்தப்படாத அரச காணிகளை இளைஞர்களுக்கு விவசாயத்திற்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய விவசாயக் கொள்கையை திருத்தங்களுடன் தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது, இது எதிர்காலத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். விவசாயக் கொள்கையின் ஊடாக இந்நாட்டின் விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்கு பாரியளவு பங்களிப்புச் செய்ய முடியும்”

எனக் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button