இலங்கையில் புதிய கொவிட் வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
இந்தியாவில் பரவலாகக் காணப்படும் கொவிட்-19 வைரஸின் வேகமாகப் பரவும் மாறுபாடான JN.1 வைரஸால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நோயாளியும் நாட்டில் பதிவாகவில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய மாறுபாடு இந்தியாவின் கேரளாவில் பதிவாகியதையடுத்து, இந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஓமிக்ரோன் JN.1 கொவிட் வைரஸின் புதிய துணை வகையாக அடையாளம் கண்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் கேரளாவில் ஒரு பெண்ணிடம் பதிவாகியுள்ளது.
வெளிநாட்டில் பரவும் எந்தவொரு புதிய நோயும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் அது தொடர்பில் எப்போதும் அவதானம் செலுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
JN.1 வைரஸ் திரிபு என்பது மற்ற அனைத்து துணை வகைகளிலிருந்தும் கணிசமாக வேறுபடும், வேகமாக பரவும் திரிபு என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த புதிய துணை வகையின் அறிகுறிகள் காய்ச்சல், மூக்கு வடிதல், தொண்டை புண், தலைவலி, இரைப்பை குடல் வலி போன்றவையாகும். இந்த வைரஸ் மாறுபாடு ஒகஸ்ட் மாதம் முதல் அமெரிக்காவிலும் பதிவாகியுள்ளது.