News

மேலும் குறைக்கப்படும் வங்கி வட்டி வீதம்! மத்திய வங்கி ஆளுரின் தகவல்

23.8% ஆக காணப்பட்ட வங்கி வட்டி 10.3% ஆக குறைவடைந்துள்ளது. இதனை இன்னும் சில மாதங்களில் மேலும் குறைக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச இரத்தினக்கல் , ஆபரண வர்த்தக நிலையத்தை   திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இரு வருடங்களாக மிகவும் நெருக்கடியுடன் நாட்டை கொண்டுச் சென்றோம். இதன்போது வரி அதிகரிப்பு உள்ளிட்ட கடினமான தீர்மானங்களை முன்னெடுத்தோம். இன்றைய பிரதிபலன்களை பார்க்கும் போது நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.

ஜூலை 2022 இல் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி 7.4 என்ற மறைப் பெறுமானத்தை காட்டியது. ஆனால் 2024 இல் 4.5 என்ற நேர் பெறுமானத்தை காண்பிக்கிறது.இரண்டு வருடங்களில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் இந்தக் கஷ்டங்களைச் சகித்துக்கொண்டதாலே இந்த மாற்றம் ஏற்பட்டது.

2022 ஜூலை மாதமளவில் 54.6% ஆக காணப்பட்ட பணவீக்கம் இன்று 9% ஆக குறைத்திருப்பதால் ரூபாய் வலுவடைகிறது. அன்று 23.8% ஆக காணப்பட்ட வங்கி வட்டி 10.3% ஆக குறைவடைந்துள்ளது. இதனை இன்னும் சில மாதங்களில் மேலும் குறைக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 50% ஆக அதிகரித்துள்ளது. அதனால் சமூக சேவைகளுக்கான செலவு மூன்று மடங்கினால் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், தற்போது கடன் மறுசீரமைப்பு பணிகளை இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. உள்நாட்டுக் கடன் குறித்து ஆலோசித்து வருகிறோம். அடுத்த கட்டமாக எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் உடன்படிக்கைக்கு வரவேண்டும்.

இந்தப் பணியைத் தொடர்வதற்கான இலக்குகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியமும் அரசாங்கமும் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். அரசாங்கக் கடன் தற்போது மொத்த தேசிய உற்பத்தியில் 128% ஆக காணப்படுகிறது.

2032 ஆம் ஆண்டுக்குள் அதனை 95% ஆக குறைக்க வேண்டும். தற்போது, ​​மொத்த தேசிய உற்பத்திக்கு மேலதிகமாக 35% வருமானத்தை ஈட்ட வேண்டும். 2032 ஆம் ஆண்டுக்குள் அதனை 13% ஆக குறைக்க வேண்டும்.

மேலும், மொத்த தேசிய உற்பத்தியில் 9.4% ஆக காணப்படும் வெளிநாட்டுக் கடன்களை2025 ஆம் ஆண்டிலிருந்து 2.3% உபரியாக மாற்றிக்கொள்ள முயற்சித்தல் உள்ளிட்ட இலக்குகளை நோக்கி நகர வேண்டும்.

இந்த நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கினால், எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகள்,  நீங்கள் விதிமுறைகளை மீறிவிட்டீர்கள், எனவே கடனைத் திருப்பித் தாருங்கள்  என்று அறிவிக்கும்.

ஆனால் இந்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button