லிட்ரோ எரிவாயு குறித்து அமைச்சரவை வழங்கிய அனுமதி!
லிட்ரோ கேஸ் லங்கா லிமிடட்டிற்கு 2025 ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை M/s OQ Trading Limited இற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் கீழே…
2025 ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை வழங்கல்
லிட்ரோ கேஸ் லங்கா லிமிடட்டிற்கு 2025ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகத்திற்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரல் முறையைக் கடைப்பிடித்து ஒருகட்ட இரட்டை கடிதவுறை முறையின் கீழ் விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்காக M/s OQ Trading Limited மற்றும் M/s Siam Gas Trading Pte Limited ஆகிய இரண்டு நிறுவனங்கள் மாத்திரம் விலைமுறியினை சமர்ப்பித்துள்ளது. தொழில்நுட்ப மதிப்பீட்டின் போது M/s Siam Gas Trading Pte Limited இனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலைமுறி நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக்குழுவின் விதந்துரைகளுக்கமைய விபரங்களுடன் கூடிய பதிலளித்துள்ள விலைமனுதாரரான M/s OQ Trading Limited இற்கு 2025 ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.