தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை
2024ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் திகதியுடன் முடிவடையும் காலக்கெடுவின்படி ஒப்படைக்கப்பட்ட 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளின் தொகுப்பை தேர்தல்கள் ஆணைக்குழு ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்தலில் போட்டியிட்ட அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 8361 வேட்பாளர்களிடமிருந்து மொத்தம் 7412 வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சுயேச்சை அரசியல் குழுக்களில் போட்டியிட்ட 690 வேட்பாளர்களிடமிருந்து 493 வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, 527 தேசியப் பட்டியல் உறுப்பினர்களில், 434 நபர்கள் மட்டுமே தங்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை கையளித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் செலவிடப்பட்ட பணம் தொடர்பான அறிக்கையை சமர்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எஸ்.ரத்நாயக்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.