News

இலங்கை குறித்த முக்கிய அறிக்கை வௌியானது

இலங்கையில் பல்வேறு வகையான நெருக்கடிகளுக்கு வழிவகுத்த பல காரணங்கள் குறித்த தகவல்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது 2025 உலக அறிக்கையை வௌியிட்டு வௌிப்படுத்தியுள்ளது.

546 பக்கம் கொண்ட இந்த உலக அறிக்கை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் மனித உரிமைகளை மதிப்பாய்வு செய்கிறது.

உரிமை மீறல்கள், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான பாகுபாடு, போராட்டக்காரர்களை மௌனமாக்க முயலும் சட்டங்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் நடைமுறைகள் ஆகியவை இலங்கையில் பல நெருக்கடிகளுக்கு பங்களித்துள்ளன என்று அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நீண்டகால மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக உறுதியளித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறித்த அறிக்கையில் சுட்டிகாட்டியுள்ளது.

நியாயமான பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தவும், பயங்கரவாதத்தடைச் சட்டத்தினைத் திருத்துவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது நடத்தப்பட்ட பரந்தளவிலான மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு அவர் ஆதரவளிக்கவில்லை என உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினால், உரிமைகளில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கூறினார்.

முந்தைய நிர்வாகத்தால் அடக்குமுறைச் சட்டங்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரின் தன்னிச்சையான நடவடிக்கைகளை பயன்படுத்தி தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் சமூக இடத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அரசு சாரா நிறுவன செயலகத்தில் சிவில் சமூக அமைப்புகள் பதிவு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தினாலும், அவை கட்டாயக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

முந்தைய அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்களின்படி, 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 46 கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்கள் இடம்பெற்றதாக கூறிய போதுலும், இதுபோன்ற 9 சம்பவங்கள் மட்டுமே நடந்ததாக அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதன் உலக அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டுகிறது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யுக்திய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், 2024 மே மாதத்திற்குள் பல சந்தர்ப்பங்களில் எந்தவொரு தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் சுமார் 100,000 பேர் கைது செய்யப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிடுகிறது.

இவ்வாறான நிலையில், புதிய ஜனாதிபதி இலங்கையின் பல மனித உரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தொடங்குவார் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது 2025 உலக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button