அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுகளை ஏப்ரல் முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில், மாத சம்பளம் வழங்குவதற்கான வழக்கமான திகதிக்கு முன்னதாக ஏப்ரல் 10 ஆம் திகதி அவற்றை வழங்கவும் அரசாங்கம் தயாராகி வருகிறது.
குறித்த விடயத்தை நிதி அமைச்சின் உயர் அதிகாரியை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பின்னர், ஒரு வார காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஊக்கத்தொகைகள் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரச ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த அடிப்படை சம்பளத்தை 24250 ரூபாயிலிருந்து 40000 ரூபாவாக 15750 ரூபாயால் அதிகரிக்கவும் தற்காலிக இடைக்கால கொடுப்பனவு மற்றும் சிறப்பு கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்தில் இணைக்கவும் வரவு செலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 21 ஆம் திகதி வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படவுள்ள நிலையில், மார்ச் மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் அதிகரிக்கப்பட்ட நிதியை வழங்குவதற்கான திட்டம் அடங்கிய சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட உள்ளது.
சுற்றறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக நிதி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.