க.பொ.த உயர்தர பரீட்சைக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள மாணவர்கள்!

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு உள்ளக பரீட்சார்த்தியாக பரீட்சை எழுதுவதற்குப் பல மாணவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாடசாலை வருகையை அதிகரிக்கவும், தனியார் வகுப்புகளில் ஆசிரியர்கள் பணத்துக்காகக் கற்பிப்பதைக் கட்டுப்படுத்த வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம், 80% வருகை இல்லாத மாணவர்கள் உள்ளக பரீட்சார்த்தியாக பரீட்சை எழுதுவதைத் தடுக்கும் செயற்பாட்டில் சில அதிபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள பல பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பரீட்சைக்கான உரிமை மறுக்கப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2006 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ” சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, வரவு குறைவாக உள்ள சில உயர்தர மாணவர்களை உள்ளக பரீட்சார்த்தியாக தோற்றுவதை நிறுத்தி தனியாள் பரீட்சார்த்தியாக பரீட்சைக்கு தேற்றுமாறு அதிபர்கள் அழுத்தம் கொடுப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு பாடசாலை வரவு 80% அவசியம் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டாலும், இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யாத மாணவர்கள் மருத்துவ அறிக்கைகள் மற்றும் அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணங்களின் அடிப்படையில் பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த சுற்றறிக்கை கிடப்பில் போடப்பட்டிருந்தது.
மேலும் இதனைக் காரணம் காட்டி மாணவர்களின் பரீட்சை உரிமையைப் பறிக்கும் சம்பவங்கள் நடக்கவில்லை. இருப்பினும், இம்முறை, இந்த சுற்றறிக்கையைப் பயன்படுத்தி,அதிபர்கள் மாணவர்களின் பரீட்சைக்கான உரிமையைப் பறிப்பதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.