News

இலங்கையில் சீனாவின் மிகப்பெரிய துறைமுக முதலீடு

சீனாவின் இராணுவம் இலங்கையில் தனது இரண்டாவது வெளிநாட்டு கடற்படைத் தளத்தை உருவாக்க வாய்ப்பு உள்ளதென சர்வதேச அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வேர்ஜீனியாவின் வில்லியம் மேரி கல்லூரியின் எய்ட்டேட்டா ஆய்வகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்றவற்றில் சர்வதேச வர்த்தகத்தை பாதுகாக்க துறைமுகம் மற்றும் துறைமுக உள்கட்டமைப்பை நிறுவுவதில் சீன வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளதாக ஆய்வு செய்த புதிய அறிக்கையின்படி சீனாவின் அடுத்த வெளிநாட்டு துறைமுகம் இலங்கையில் அமையலாம் என தெரிவித்துள்ளது.

உலகளாவிய அபிலாசைகளை பாதுகாத்தல் – சீனாவின் துறைமுக தடம் மற்றும் எதிர்கால வெளிநாட்டு கடற்படை தளங்களுக்கான தாக்கங்கள் என்ற ஜூலை மாத அறிக்கையில் சீனாவின் அடுத்த வெளிநாட்டு கடற்படை தளம் எங்கு அமையலாம் என எட்டு இடங்களை குறிப்பிட்டுள்ளன.

வேர்ஜீனியாவின் வில்லியம் மேரி கல்லூரியின் எய்ட்டேட்டா ஆய்வகம் சீனாவின் வெளிநாட்டு கடற்படை தளம் இலங்கையில் அமைவதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பில் அவ்வறிக்கையில்,

“இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திலேயே சீனாவின் அடுத்த வெளிநாட்டு தளம் அமையலாம்.

இதற்காக சீனா 2.19 பில்லியன் அமெரிக்க டொலர்களை அங்கு முதலீடு செய்துள்ளது.

பாக்கிஸ்தான் கமரூன் ஆகியநாடுகளில் இரண்டு முதல் ஐந்துவருடங்களில் தளங்கள் அமைய வாய்ப்புள்ளது.

சீனாவின் உலகிலேயே மிகப்பெரிய பாரிய துறைமுக முதலீடு அம்பாந்தோட்டையே என்பதோடு சீனா நேரடி கட்டுப்பாட்டை செலுத்துகின்றது.

மூலோபாய அடிப்படையில் அமைந்துள்ளதாலும் உயர்வர்க்கத்தினர் பொதுமக்கள் சீனா மீது அதிக நாட்டம் கொண்டுள்ளதாலும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் வாக்கெடுப்புகளில் இரண்டு நாடுகளிற்கும் இடையில் நல்லுறவு காணப்படுவதாலும் அம்பாந்தோட்டையே அடுத்த சீனாவின் தளம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா தனது முதலாவது வெளிநாட்டு கடற்படை தளத்தினை 2016 ம் ஆண்டு கிழக்கு ஆபிரிக்காவின் ஜிபூட்டியில் அமைத்துள்ளது. 590 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தளத்தில் 2000 படையினர் உள்ளனர்.

இவர்கள் ஹோர்ன் ஒவ் ஆபிரிக்காவை சுற்றியுள்ள கடல் பகுதியிலிருந்து பயணிக்கும் சீன கப்பல்கள் மத்தியதரை கடல் ஐரோப்பாவிற்கு செல்வதற்காக சூயஸ்கால்வாயை அணுகும் சீன கப்பல்களை கடற்கொள்ளையர்களிடமிருந்து தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button