மீண்டும் பொருட்களின் விலையேற்றம் ….!

அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதிக்க கூடாது என்ற அநுரவின் அரசில் தான் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19.03.2025) உரையாற்றிய போதே ரோஹித்த அபேகுணவர்தன இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura kumara dissanayake) எதிர்க்கட்சியில் இருக்கும் போது பால்மா பிள்ளைகளுக்கு மிகவும் முக்கியமானது. பால்மா விலையை குறைக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதிக்க கூடாது, அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தற்போது இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரிசியின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பால் தான் வீதிக்கு இறங்கி போராடினார்கள். எமது அரசாங்கத்தை வீழ்த்தி தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை கொண்டு வந்துள்ளார்கள்.
யார் ஆட்சியில் இருப்பது என்று மக்கள் பார்ப்பதில்லை. தான் சிறந்த முறையில் வாழ வேண்டும் என்றே மக்கள் கருதுவார்கள்.
ஆகவே மக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். வேலையில்லா பட்டதாரிகளில் பெரும்பாலானோர் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தார்கள்.
ஆகவே தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக தொழில் வாய்ப்புக்களை வழங்குங்கள்.
பட்டதாரிகளின் போராட்டத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரித்துள்ளார்.